Monday, April 12, 2010

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல


பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை.

பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.

நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி" என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு "மர்லின் மன்றோ" என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் "இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. "இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை" என்று திரும்பி இருந்தால் ஹேமா மாலினி அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.

மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது" என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.


விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர் தான் டாக்டர் அப்துல் கலாம். விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்" என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.


இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் - மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

Thursday, April 8, 2010

நான் ரசித்து படித்த விடயத்தை உங்கள் ரசனைக்கு விடுகிறேன்


பள்ளிக்கூட உயர்தர நாட்களிலதான் நான் அவளப் பாத்தன்.
பக்கத்தில இருந்த நண்பனிட்ட சொன்னன், ‘ மச்சான் இவ வடிவு தான??’
நண்பன் சொன்னான்,

’ ம்ம்ம்……வடிவாத்தான் இருக்கிறாள்’

பிறகு பஸ்ஸில அடிக்கடி ரெண்டு பேரும் சந்திச்சது சத்தியமா தற்செயல்தான், அதுக்கு என்ன அர்த்தம்?
இத நான் கேக்கேக்க நண்பன் சொன்னான்,

‘நான் கூட அந்த பஸ் கண்டக்டர அடிக்கடி பாக்கிறன். அதுக்கு என்ன மச்சான் அர்த்தம்?’

கொஞ்ச நாள் போக அவள் என்னப் பாத்துச் சிரிச்சாள். எண்ட முகத்தில லைட் எரிஞ்சதப் பாத்து நண்பன் சொன்னான்,

‘சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே’

’எல்லாரும் அப்பிடி இல்ல மச்சான். கொஞ்சப் பேர வச்சு முடிவு பண்ணாத’ எண்டு நான் சொன்னதுக்கு நண்பன் சொன்னான்,

‘பச்சப் பிள்ள, பாவம்’

அவள்ட ஃப்ரெண்ட்ஸிட ஃப்ரெண்ட்ஸ ஃப்ரெண்ட் பிடிச்சு அவள்ட பேர் விசாரிக்கப் போகேக்க நண்பன் சொன்னான்,

’மச்சான், மத்ஸ் பயிற்சிப்புத்தகம் எழுதினவர் கணேசலிங்கம்’

ஒருமாதிரி அலைஞ்சு திரிஞ்சு அவள்ட கிளாஸ் டைம் டேபிள் எடுத்து அந்தக் கிளாஸுக்கு போய் அட்மிஷன் எடுக்கேக்க நண்பன் சொன்னான்’

‘கொஞ்சம் பாடத்தயும் கவனி மச்சான்’

கிளாஸ்ல வாத்தி படிப்பிக்கேக்க அவளுக்கு பக்கத்து வாங்கில இருந்து அவள நான் பாக்கேக்க நண்பன் சொன்னான்’

‘டேய், ப்ளக் போர்ட் முன்னால இருக்கு’

எழுதவே போறேல எண்டாலும் அவளிட்ட கதைக்கிறத்துக்காக நோட்ஸ் கொப்பி கேக்கப் போகேக்க நண்பன் சொன்னான்,

‘ வேலில போற ஓணான வேட்டிக்குள்ள விடாத’

வேண்டின கொப்பிக்குள்ள வேலையில்லாத வேலையா மினக்கெட்டுச் செஞ்ச ஐ லவ் யூ கார்ட்ட வச்சு கிளாஸ் முடியக் குடுக்கேக்க நண்பன்
சொன்னான்’

‘ஆப்பு வேண்ட அப்ளிகேஷனா????’

அடுத்தநாள் கிளாஸுக்கு எண்டுமில்லாத் திருநாளா அரைமணித்தியாலம் முன்னுக்கே போய் காத்திருக்கேக்க நண்பன் சொன்னான்,

‘அவள் எங்கட ஸ்கூலா இருந்தா நீ ஸ்கூலுக்கும் நேரத்தோட வருவாய்’

பத்துப் பதினஞ்சு நிமிஷத்தால வகுப்புக்கு வந்த அவள் நோட்ஸ் கொப்பியக் கொண்டு வந்து எண்ட வாங்கில வச்சிட்டு, ஓடிப்போய் முன்னுக்கு ஒரு வாங்கில இருந்து என்னத் திரும்பிப் பாத்த நேரம் நண்பன் சொன்னான்,

‘ஆப்பு அப்ரூவ்ட் மச்சான்’

அதுக்குப் பிறகு அடிக்கடி கிளாஸ்ல என்னயும் அவளயும் காணமுடியாம இருக்கேக்க நண்பன் சொன்னான்,

‘இன்னும் கொஞ்ச நாள்தான், எக்ஸாமுக்கு’

அவள்ட பேர்த்டேக்கு கிஃப்ட் வேண்ட காசு சேத்தன். அப்ப நண்பன் சொன்னான்,

‘நீ என்னும் பாஸ்பேப்பர் வேண்டேல’

அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள நான் தவிர்க்கத் தொடங்க நண்பன் சொன்னான்,

‘ அவளுக்கு படிப்பும் பிடிக்காதா????’

கொஞ்ச நாளில அடிக்கடி நானும் அவளும் ஃபோன்ல, நேரிலயெல்லாம் சண்ட பிடிக்க்கேக்க நண்பன் சொன்னான்,

‘ எத்தின நாள் இண்டையோட?? ’

சமதானம் பேச நண்பன வலுக்கட்டாயமா இழுத்துக்கொண்டு போகேக்க வழில ஒரு ரெஸ்டோரண்ட் வாசலில ஐஸ்க்றீமும் கையுமா அவளயும், அவளும் கையுமா இன்னொருத்தனயும் பாத்த நேரம் நண்பன் சொன்னான்,

‘ சனிப் பெயர்ச்சிடா, விட்டுத்தள்ளு’

கிட்டத்தட்ட ஒரு மாசமா முகம் பாக்கிற கண்ணாடியே அழுகிற அளவுக்கு வயக்கெட்டுத் திரியேக்க நண்பன் அடிக்கடி சொன்னான்,

‘ இன்னும் நாலு மாசம் இருக்கு, உன்னால முடியும், வா சேந்து படிப்பம், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருந்தா இன்னும் நல்லா படிக்கலாம், முதல்ல அந்த தாடிய எடு ’

நண்பன் புண்ணியத்தில கடைசி எக்ஸாமயும் நல்லபடியா எழுதி முடிச்சிட்டு போறவழியில ஒரு ஓட்டோ அவளயும் இன்னொரு இன்னொருத்தனயும் கூட்டிக்கொண்டு போறதப் பாக்கேக்க நண்பன் சொன்னான்,

‘ இதெல்லாம் ஒரு பிழப்பு ’

ஒரு வழியா போர்டர்ல கம்பஸுக்கு செலெக்ட் ஆகி முதல் நாள் உள்ள போகேக்க தாண்டிப்போன பெட்டையப் பற்றி பக்கத்தில இருந்த நண்பனிட்ட சொன்னன், ‘ மச்சான் இவ வடிவு தான??’

நண்பன் சொன்னான்,

‘மறுபடியும் முதல்ல இருந்தா??????????????????’

Friday, April 2, 2010

அங்காடி தெரு திரை விமர்சனம்



அங்காடி தெரு முன்தினம் பார்த்தேனே கச்சேரி ஆரம்பம் யாதுமாகி மாத்தி யோசி தம்பிக்கு இந்த ஊரு அவள் பெயர் தமிழரசி வீரசேகரன் விண்ணைத்தாண்டி வருவாயா தீராத விளையாட்டுப் பிள்ளை அசல் More Reviews Koodal Rating:

நடிகர்கள் - மகேஷ், அஞ்சலி, ஏ.வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி,
இசை - விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்கம் - ஜி.வசந்தபாலன்
தயாரிப்பு - கே.கருணாமூர்த்தி - சி.அருண்பாண்டியன்

ஒரு அங்காடியில் வேலை செய்யும் ஏழை இளைஞனுக்கும், பெண்ணுக்கும் இடையே முளைவிடும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை.

சென்னையில் உள்ள செந்தில்முருகன் ஸ்டோர்ஸ் ஜவுளி, பாத்திர கடைக்கு தென் மாவட்டங்களிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். பிளஸ்-2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறிய ஜோதிலிங்கத்தின் வாழ்க்கையை, அவனுடைய அப்பாவின் திடீர் மரணம் திசை மாற்றுகிறது. அம்மாவையும், இரண்டு தங்கைகளையும் காப்பாற்றுவதற்காக, சென்னையில் உள்ள செந்தில் முருகன் ஸ்டோரில் வேலைக்கு சேருகிறான்.

இவனைப்போல தன் சொந்த ரத்த பந்தங்களை காப்பாற்றுவதற்காக போராடும் நூற்றுக்கணக்கான பேர், அந்த கடையில் பணிபுரிகிறார்கள். அவர்களில் சேர்மக்கனியும் ஒருத்தி. இவளும் ஏழ்மையின் இறுதிக்கட்டத்தை எட்டிப்பிடித்தவள்தான். அப்பாவின் இயலாமை காரணமாக, செந்தில் முருகன் ஸ்டோரில் வேலை செய்கிறாள்.

இங்கு வேலை பார்க்கும் ஜோதிலிங்கத்துக்கும், சேர்மக்கனிக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இருவருக்கும் வாழ்க்கை தந்த வலி, மோதலை மறக்கச் செய்து, நட்பு வட்டத்துக்குள் நுழைய வைக்கிறது. அது காதலாகிறது. இதற்கிடையே அந்த கடையிலேயே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஒரு காதல் நசுக்கப்படுகிறது. இதனால் ஜோதிலிங்கமும், சேர்மக்கனியும் மிரண்டு போகிறார்கள். இவர்களின் காதல், கடை உரிமையாளருக்கு தெரிய வரும்போது, திருட்டு பட்டம் கட்டி ஜோதிலிங்கத்தை போலீசில் ஒப்படைக்கிறார்கள். அதன் பின் என்ன என்பது நெஞ்சை உலுக்கும் இறுதிகாட்சி!

ஜோதிலிங்கமும், சேர்மக்கனியுமாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார்கள் மகேஷ்-அஞ்சலி. "என் தங்கை உன்னை யார் என்று கேட்டாள்..." என்று அஞ்சலி குறும்பு கலந்த வெட்கத்துடன் மகேஷிடம் சொல்ல- "நீ என்ன சொன்னே?" என்று அவன் கேட்க- "சிரித்தேன்" என்று ஒற்றை வார்த்தையில் அத்தனை காதலையும் அஞ்சலி வெளிப்படுத்தும் காட்சியில், திரையரங்கமே அதிர்கிறது.

அந்த சின்னப்பெண்ணுக்கு சடங்கு முடிந்ததும் மகேஷ் புறப்பட ஆரம்பிக்க- தங்கையின் சடங்கு நல்லபடியாக கழிந்ததற்கு அவன்தான் காரணம் என்ற உணர்ச்சி கொந்தளிப்புடன் அஞ்சலி ஓடிவந்து மகேஷை கட்டிக்கொள்ளும் இடம், கவிதை.

ஆஸ்பத்திரியில், "நாம் இரண்டு பேரும் உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று மகேஷ் சொல்வதும், அஞ்சலி கண்­ணீருடன் அவரை கட்டித்தழுவுவதும், நடிப்புக்காக இருவரும் பாராட்டப்படும் இன்னொரு காட்சி.

அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் பழ.கருப்பையா. சில காட்சிகளே வந்தாலும் அந்த மிடுக்குப் பார்வை மிரட்டல். ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போது நடக்கும் சம்பிரதாயமும், மரியாதைகளும் மக்கள் அறிந்திராத அரிதான காட்சிகளில் ஒன்று. கவனத்தை ஈர்த்த இன்னொருவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் நம்மையறியாமல் ஒரு நடுக்கமே வந்துவிடுகிறது. இவர் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளில் பாதி சென்சார் அதிகாரிகளுக்கு புரியாமல் போவதால் தாயோளி முண்டைகளும், கூ... களும் சரளமாக விழ அனுமதித்திருக்கிறார்கள். அந்த கிராமத்து கிழவியின் "அறுத்துபுடுவேன்...." டயலாக்குக்கு திரையரங்கமே துவம்சம் ஆகிறது. மகேஷின் நண்பனாக வரும் பிளாக் பாண்டிக்கும் மனசுக்குள் ஒரு தனி இடம் கிடைக்கிறது.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது போலத் தோன்றும். ஆனாலும் இதுபோன்ற படங்களில் என்ன குறையிருக்கிறது என்று தேடுவதை விட்டுவிடலாம்.

ரிச்சர்டின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் அனைத்துமே சிறப்பாக உள்ளது. ஜெயமோகனின் வசனங்கள் இன்னொரு ப்ளஸ். விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை", "உன் பேரை சொல்லும் போதே" பாடல்கள் இதம். ஆண்டனியின் பின்னணி இசை ஓகே வகை.

அஞ்சலியின் தங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள், ஒரு கிளை கதையாக தோன்றினாலும், அதிலும் படம் பார்ப்பவர்களை ஒன்ற வைத்திருப்பது, வசந்தபாலனின் முத்திரை. படத்தில் அந்த குண்டுப்பெண், தன் குழந்தை கணவரைப்போல் குள்ளமாக பிறந்ததற்காக பெருமைப்படுவதாக சொல்லும் இடத்தில், திரையரங்கத்தில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

"வெயில்" படத்தில் விதியின் விளையாட்டுகளை சித்தரித்த வசந்தபாலன், இந்த படத்தில் "தன்னம்பிக்கைக்கு" கோவில் கட்டியிருக்கிறார். இப்படியொரு கதைக் களத்தை யோசித்த வசந்தபாலனை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்!