Friday, April 2, 2010

அங்காடி தெரு திரை விமர்சனம்



அங்காடி தெரு முன்தினம் பார்த்தேனே கச்சேரி ஆரம்பம் யாதுமாகி மாத்தி யோசி தம்பிக்கு இந்த ஊரு அவள் பெயர் தமிழரசி வீரசேகரன் விண்ணைத்தாண்டி வருவாயா தீராத விளையாட்டுப் பிள்ளை அசல் More Reviews Koodal Rating:

நடிகர்கள் - மகேஷ், அஞ்சலி, ஏ.வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி,
இசை - விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்கம் - ஜி.வசந்தபாலன்
தயாரிப்பு - கே.கருணாமூர்த்தி - சி.அருண்பாண்டியன்

ஒரு அங்காடியில் வேலை செய்யும் ஏழை இளைஞனுக்கும், பெண்ணுக்கும் இடையே முளைவிடும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை.

சென்னையில் உள்ள செந்தில்முருகன் ஸ்டோர்ஸ் ஜவுளி, பாத்திர கடைக்கு தென் மாவட்டங்களிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். பிளஸ்-2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறிய ஜோதிலிங்கத்தின் வாழ்க்கையை, அவனுடைய அப்பாவின் திடீர் மரணம் திசை மாற்றுகிறது. அம்மாவையும், இரண்டு தங்கைகளையும் காப்பாற்றுவதற்காக, சென்னையில் உள்ள செந்தில் முருகன் ஸ்டோரில் வேலைக்கு சேருகிறான்.

இவனைப்போல தன் சொந்த ரத்த பந்தங்களை காப்பாற்றுவதற்காக போராடும் நூற்றுக்கணக்கான பேர், அந்த கடையில் பணிபுரிகிறார்கள். அவர்களில் சேர்மக்கனியும் ஒருத்தி. இவளும் ஏழ்மையின் இறுதிக்கட்டத்தை எட்டிப்பிடித்தவள்தான். அப்பாவின் இயலாமை காரணமாக, செந்தில் முருகன் ஸ்டோரில் வேலை செய்கிறாள்.

இங்கு வேலை பார்க்கும் ஜோதிலிங்கத்துக்கும், சேர்மக்கனிக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இருவருக்கும் வாழ்க்கை தந்த வலி, மோதலை மறக்கச் செய்து, நட்பு வட்டத்துக்குள் நுழைய வைக்கிறது. அது காதலாகிறது. இதற்கிடையே அந்த கடையிலேயே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஒரு காதல் நசுக்கப்படுகிறது. இதனால் ஜோதிலிங்கமும், சேர்மக்கனியும் மிரண்டு போகிறார்கள். இவர்களின் காதல், கடை உரிமையாளருக்கு தெரிய வரும்போது, திருட்டு பட்டம் கட்டி ஜோதிலிங்கத்தை போலீசில் ஒப்படைக்கிறார்கள். அதன் பின் என்ன என்பது நெஞ்சை உலுக்கும் இறுதிகாட்சி!

ஜோதிலிங்கமும், சேர்மக்கனியுமாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார்கள் மகேஷ்-அஞ்சலி. "என் தங்கை உன்னை யார் என்று கேட்டாள்..." என்று அஞ்சலி குறும்பு கலந்த வெட்கத்துடன் மகேஷிடம் சொல்ல- "நீ என்ன சொன்னே?" என்று அவன் கேட்க- "சிரித்தேன்" என்று ஒற்றை வார்த்தையில் அத்தனை காதலையும் அஞ்சலி வெளிப்படுத்தும் காட்சியில், திரையரங்கமே அதிர்கிறது.

அந்த சின்னப்பெண்ணுக்கு சடங்கு முடிந்ததும் மகேஷ் புறப்பட ஆரம்பிக்க- தங்கையின் சடங்கு நல்லபடியாக கழிந்ததற்கு அவன்தான் காரணம் என்ற உணர்ச்சி கொந்தளிப்புடன் அஞ்சலி ஓடிவந்து மகேஷை கட்டிக்கொள்ளும் இடம், கவிதை.

ஆஸ்பத்திரியில், "நாம் இரண்டு பேரும் உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று மகேஷ் சொல்வதும், அஞ்சலி கண்­ணீருடன் அவரை கட்டித்தழுவுவதும், நடிப்புக்காக இருவரும் பாராட்டப்படும் இன்னொரு காட்சி.

அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் பழ.கருப்பையா. சில காட்சிகளே வந்தாலும் அந்த மிடுக்குப் பார்வை மிரட்டல். ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போது நடக்கும் சம்பிரதாயமும், மரியாதைகளும் மக்கள் அறிந்திராத அரிதான காட்சிகளில் ஒன்று. கவனத்தை ஈர்த்த இன்னொருவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் நம்மையறியாமல் ஒரு நடுக்கமே வந்துவிடுகிறது. இவர் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளில் பாதி சென்சார் அதிகாரிகளுக்கு புரியாமல் போவதால் தாயோளி முண்டைகளும், கூ... களும் சரளமாக விழ அனுமதித்திருக்கிறார்கள். அந்த கிராமத்து கிழவியின் "அறுத்துபுடுவேன்...." டயலாக்குக்கு திரையரங்கமே துவம்சம் ஆகிறது. மகேஷின் நண்பனாக வரும் பிளாக் பாண்டிக்கும் மனசுக்குள் ஒரு தனி இடம் கிடைக்கிறது.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது போலத் தோன்றும். ஆனாலும் இதுபோன்ற படங்களில் என்ன குறையிருக்கிறது என்று தேடுவதை விட்டுவிடலாம்.

ரிச்சர்டின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் அனைத்துமே சிறப்பாக உள்ளது. ஜெயமோகனின் வசனங்கள் இன்னொரு ப்ளஸ். விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை", "உன் பேரை சொல்லும் போதே" பாடல்கள் இதம். ஆண்டனியின் பின்னணி இசை ஓகே வகை.

அஞ்சலியின் தங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள், ஒரு கிளை கதையாக தோன்றினாலும், அதிலும் படம் பார்ப்பவர்களை ஒன்ற வைத்திருப்பது, வசந்தபாலனின் முத்திரை. படத்தில் அந்த குண்டுப்பெண், தன் குழந்தை கணவரைப்போல் குள்ளமாக பிறந்ததற்காக பெருமைப்படுவதாக சொல்லும் இடத்தில், திரையரங்கத்தில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

"வெயில்" படத்தில் விதியின் விளையாட்டுகளை சித்தரித்த வசந்தபாலன், இந்த படத்தில் "தன்னம்பிக்கைக்கு" கோவில் கட்டியிருக்கிறார். இப்படியொரு கதைக் களத்தை யோசித்த வசந்தபாலனை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்!

2 comments: