Saturday, June 6, 2009

உயிர் உயிரோடு கலக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது!


அருகருகே வரையப்பட்டாலும்
சேரமுடியாத சித்திரங்களாய்...


சந்திக்கும் தூரத்தில்
சந்திக்க முடியாமல் நாம்…!


போகும் இடமெல்லாம்
இங்கே இருப்பாயா?
என தேடித்தவித்த பொழுதுகள்…


பார்க்கும் வெளியில்
நீ இருப்பாயென
கண்ணுக்குள்ளே உன் படத்தை
அசைபோட்ட நாட்கள்…


எனையறியாத துடிப்பு
இதயத்துடிப்பையும் தாண்டி
வதைக்கிறது
உன்னைப் பார்க்க
என்னை விட்டு உயிர்மட்டும்
போகநினைப்பதுபோல!


உன் நினைவுகளைக்கொண்டே
வெளி சமைத்து
விளையாட்டுக்குக் கூட
பிரிந்து பறக்கமுடியாத
ஊனப்பறவையாய் நான்…!


காலச்சுவடுகள் தந்த
கண்ணீரெல்லாம்
நீ பேசும்போது மட்டும்
மாயமாகுவதன் மர்மம் என்ன?


வெறும் பார்வைகளால் பேசுகையில்
நீயும் நானும் ஒரேசமயத்தில்
சிரிப்பது எந்த பந்தத்தில்?


நான் தனித்த இரவுகளில்
என்னை வந்து பார்
அப்போதும் உன்னுடன்தான்
பேசிக்கொண்டிருப்பேன்!


எப்போதாவது நாம்
சந்திக்கலாம்
அப்போது நான்
இறந்துவிடாமல் பார்த்துக்கொள்
உயிர்
உயிரோடு கலக்கத்
துடித்துக்கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment