Thursday, June 11, 2009

காலமெல்லாம் காதலியாய் என்னோடு நீ வேண்டும்...

 

அரவமற்ற காரிருளில்
கவிக்குயிலாய் என்னருகில்
கவிபாட நீ வேண்டும்...
கவியோடு என் கவலை
காற்றோடு கலைந்து
பறந்தோடி போகவேண்டும்...

தூற்றும் உள்ளங்கள்
போற்றும் காலம்
எமைநாடி வரவேண்டும்...
வாழ்வின் வாசனையை
தோல்வியின்றி சுவாசித்திட
அகிலத்தில் நீ வேண்டும்...

மகிழ்வென்ற மகுடத்தை
மரணம்வரை சுமந்திட
கணம் தப்பாமல் எப்போதும்
என்கூட நீ வேண்டும்...
புண்பட்ட நெஞ்சத்தில்
ஒத்தடமாய் உன்விரல்கள்
தாளங்கள் போடவேண்டும்...

தப்பொன்றும் செய்யாத
வழிகாட்டி நீயாக
எப்போதும் என்னோடு
நிஜமாக நீ வேண்டும்...
உன் தோள்சாயும் வேளையில்
தலைகோதும் விரலாக
பலருள்ளம் போற்றிடவே
உளமருகில் நீ வேண்டும்...

பந்தாக நீயும்
பந்தாவில்லாமல் நானும்
எந்நாளும் ஒன்றாக
காற்றோடு கதைபேச வேண்டும்...
சேற்றுநில தாமரையாய்
போற்றும்வாழ்வு வாழ்ந்திடவே
காலமெல்லாம் காதலியாய்
என்னோடு நீ வேண்டும்...

No comments:

Post a Comment