Tuesday, September 1, 2009

ஹிட்லர் காதலியை சுரங்கத்தில் மணந்த சுவையான கதை...




ஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
காதலியின் உண்மையான அன்பைக்கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். "பிரவுன்! உன் அன்பு என்னைப் பிரமிக்கச் செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார். "என்னை உயிருக்கு உயிராக நேசித்தீர்கள். நான் பாக்கிய சாலி. இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும்போது உங்கள் மனைவியாகச் சாக விரும்புகிறேன். இதுதான் என் கடைசி ஆசை" என்றாள் பிரவுன். இந்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.

சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவே ஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி". இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: "முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.
1 1
Posted by idea mani at 4:01 AM

No comments:

Post a Comment